Tuesday, June 2, 2009

உலக வெப்ப மயமாதல்

உலக வெப்பமயமாதலுக்கு 3 லட்சம் பேர் பலி: 30 கோடி பேர் பாதிப்பு







உலக வெப்பமயமாதலால் ஏற்பட்டு வரும் இயற்கை ஆபத்துகளுக்கு, ஓராண்டில் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர்; 30 கோடி பேர் உடல்நிலை பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், காஸ் அதிகம் பயன்படுத்துவதால், பிரிஜ், "ஏசி' போன்ற நவீன சாதனங்களால் கரியமில வாயு அதிகம் வெளிப்படுகிறது. இது தான் பூமியை சூடாக்குகிறது. பூமி சூடானால், அதில் வானிலை மற்றும் சூழல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.



அதிக வெயில், அதிக மழை, வெள்ளம், சூறாவளி என்று கண்டபடி வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமி வெப்பமாவதால், பனிமலைகள் உருகுகின்றன. அதனால், அதன் தண்ணீர் காட்டாறாக பரவுகிறது. அதனால், வெள்ளம் பெருக்கெடுக்கிறது. கடலில் சேருவதால் கடலும் பொங்குகிறது. இது மட்டுமல்ல, பனிமலைகள் உருகி விடுவதால், எதிர்காலத்தில் பல நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அதனால், வறட்சி ஏற்பட்டு பட்டினி அதிகரிக்கும். பல நோய்கள் பரவும். ஆயிரக்கணக்கில் மக்கள் மடிவர்.



இப்படி பெரும் ஆபத்துகளை ஐ.நா.,வும் அதன் அமைப்புகளும் எச்சரித்து விட்டன. இதை தடுக்க வழிகளையும் சொல்லி, கரியமில வாயுவை வெளிப்படுத்தி, வெப்பமயமாதலுக்கு துணை போகாத நாடுகளுக்கு பல வகையில் சலுகையும் தரப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், வளர்ந்த, வளரும் நாடுகள் தான் அதிகளவில் இன்னமும் கார்பன் வாயுவை வெளிப்படுத்தி வருகின்றன. ஆப்ரிக்காவில் உள்ள சில நாடுகள் உட்பட ஏழை நாடுகள், வெப்பமயமாதலுக்கு எந்த வகையிலும் துணை போகவில்லை என்றாலும், அங்கு தான் வறட்சி, வெள்ள பாதிப்பு அதிகம். ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



அறிக்கையில் அன்னன் கூறியிருப்பதாவது: உலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்து விட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடி பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில் தான் அதிக பாதிப்பு. இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



இன்னும் 25 ஆண்டில், கார்பன் வாயு வெளிப்படுவதை தடுத்து, வெப்பமயமாதல் குறைக்கப்பட்டால், பல கோடி பேர் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால், 31 கோடி பேர், பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவர்; இரண்டு கோடி பேர், வறுமையில் பாதிக்கப்படுவர்; எட்டு கோடி பேர், பாதிப்பில் இருந்து மீள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் பெயர்வர்.



ஆப்ரிக்க, வங்க தேச, எகிப்து, கடலோர, காடு அதிகமாக உள்ள நாடுகளில் தான் அதிக பாதிப்பு ஏற்படும். பணக்கார நாடுகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. வளரும் ஏழை நாடுகள் தான் அதிக பாதிப்பை கண்டுள்ளன; எதிர்காலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சில ஆப்ரிக்க நாடுகள், மேற்கு ஆசியா, தெற்காசிய நாடுகளில் வறுமை அதிகமாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தால் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்

1 comment:

  1. உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

    பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

    ReplyDelete